தென்னேரி தெப்போற்சவம் கோலாகலம்!
வாலாஜாபாத்: தென்னேரி தாதசமுத்திர தெப்போற்சவம், கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டின், 91வது ஆண்டு தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 5:30 மணி அளவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி – பூதேவியுடன் கண்ணாடி பல்லக்கில், தென்னேரி கிராமத்தில் எழுந்தருளினார். பின், அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்காரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று, இரவு, 7:30 மணி அளவில், தென்னேரி மண்டபத்தை வந்தடைந்தனர். அங்கு மூவருக்கும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம்; மலர் அலங்காரம் நடந்தது. பின், தென்னேரி தெப்பலில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், இரவு, 9:30 மணி அளவில், எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். ஏரி கரையில் இருந்த, பல்வேறு கிராமவாசிகள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு துாப, தீபம் ஏற்றி வணங்கி சென்றனர்.