உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் சிலைகள் செப்பனிடும் பணி துவக்கம்!

ராமேஸ்வரம் கோயிலில் சிலைகள் செப்பனிடும் பணி துவக்கம்!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பாலாலயத்துடன் சேதமடைந்த சுவாமி சிலைகள் செப்பனிடும் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் இரவில் அர்த்தஜாம பூஜைக்குப்பின் பல்லக்கில் பள்ளியறை சுவாமி எனப்படும் சுகாசனர் மூர்த்தி(ராமநாதசுவாமி) பள்ளியறைக்கு எழுந்தருளல் நடைபெறும். கடந்த 260 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த தங்கத்திலான இச்சிலையின் வலது கைவிரலுடன் கூடிய மழு(கோடாரி) உட்பட சில சிலைகள் சேதமடைந்திருப்பது பற்றி "தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. ராமேஸ்வரத்தை சேர்ந்த பஷி சிவராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். "தினமலர் இதழில் வந்த செய்தியையும் ஆதாரமாக எடுத்துக்கொண்ட கோர்ட், சேதமடைந்த சிலைகளை செப்பனிட உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிலைகளை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, கோயில் சர்வசாதகம் கணபதிராமன், குருக்கள் உதயகுமார் ஆகியோரால் சேதமடைந்த சிலைகளை செப்பனிடுவதற்காக பாலாலயம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுவாமி சன்னதியில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், ராமேஸ்வரம் சிருங்கேரி சங்கர மடம் மேனேஜர் மணிகெண்டி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் சுவாமிமலை குமரேசன் ஸ்தபதியால் சுகாசனர் சிலை மற்றும் திருவாச்சி செப்பனிடப்பட்டு பாலிஷ் செய்யப்பட்டது. தொடர்ந்து சோமஸ்கந்தர், சுப்ரமணியர், வள்ளி, பெருமாள், பிரதோச நாயகர் உள்ளிட்ட சிலைகள் சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !