ரமலான் சிந்தனைகள்: பிறர் மனதைப் புண்படுத்தாதீர்
சிலர் அழகாக இருப்பார்கள், சிலருக்கு பல் மேலே தூக்கி, பார்க்க விகாரமாக இருக்கும். சிலர் சிவப்பாக இருப்பார்கள். சிலரோ கருப்பாக இருப்பார்கள்.சில சமயங்களில் அழகுள்ளவர்களுக்கும், அழகில்லாதவர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து சண்டை வந்து விடும். இந்த சண்டையின் போது, தங்கள் பிரச்னையைப் பற்றி மட்டுமே பேச வேண்டுமே தவிர, அவரவர் அழகு, குணம் பற்றியெல்லாம் பேச கூடாது. பொதுவாக நம்மவர்கள், சண்டை போடும் போது, ""உன்னோட இந்த அகம்பாவத்துக்கு தானே உன்னை ஆண்டவன் நொண்டியா படைச்சுட்டான். உம் மூஞ்சி கருங்குரங்கு மாதிரி இருக்கு, என்றெல்லாம், அவர்களின் மனம் புண்படும் வகையில் எள்ளி நகையாடுவார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இத்தகைய செயலைக் கண்டிக்கிறார்கள். ஒருமுறை, தன் அன்பு மனைவி ஆயிஷா அம்மையார் இப்படி சொன்னதற்காக அவரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். நபிகள் நாயகத்துக்கு ஸபிய்யா என்ற மனைவி உண்டு. இவர் குள்ளமாக இருப்பார். ஒரு முறை ஆயிஷாவுக்கும், ஸபிய்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுபற்றி நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா புகார் கூறும்போது, ""ஸபிய்யா என்னுடன் சண்டை போடுகிறார். குள்ளமாக இருக்கும் அவருக்கு இதெல்லாம் தேவை தானா? என்ற ரீதியில் பேசிவிட்டார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள், ""ஆயிஷா! நீ எவ்வளவு மாசுபடிந்த சொல்லை உன்வாயால் வெளிப்படுத்தியுள்ளாய் தெரியுமா? அந்தச் சொல்லைக் கடலில் கரைத்தால், அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்திவிடும், என்றார்கள். எவ்வளவு அர்த்தம் வாய்ந்த சொற்கள் பாருங்கள்! ஒருவர் இன்னொருவரின் உருவத்தையோ, அழகையோ எள்ளி நகையாடுவது பெரும் தவறு என்ற ரீதியில் நாயகம் இப்படி சொல்லியுள்ளார்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி