உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கருவறையில் புகுந்த பாம்பு: பக்தர்கள் பரவசம்!

கோவில் கருவறையில் புகுந்த பாம்பு: பக்தர்கள் பரவசம்!

ஆத்தூர்: ஆத்தூரில் உள்ள கோவிலின் கருவறைக்குள் புகுந்த கருநாக பாம்பு, நள்ளிரவில்தான் வெளியேறியது. ஆத்தூர், கோட்டை வசிஷ்ட நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணியளவில், கோவில் பூஜாரி ராஜாமணி, அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கு சென்றார். அப்போது, அம்மன் கருவறை சிலை அருகில் கருநாக பாம்பு ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், கருவறையின் வலது புறம் மற்றும் இடதுபுறம் சென்று, அம்மன் சிலை முன் வழிபாடு செய்தது. அதையறிந்த பக்தர்கள் ஏராளமானோர், பால், முட்டை போன்றவைகளை கருநாகத்துக்கு வைத்து வெளியேறும்படி கும்பிட்டனர். ஆனால், கருவறையை விட்டு பாம்பு செல்லாமல் இருந்தது. இந்த சம்பவத்தை அறிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர். கருவறையிலேயே படுத்திருந்த பாம்பு, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், கோவில் வாசற்படி வழியாக வெளியேறியது. அதை பார்த்த பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேக பூஜை செய்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். அப்போது, பல பெண்கள், பாம்பு போன்று உடல்களை வளைத்து அருள் வந்து ஆடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !