தனுஷ்கோடியில் மகாமகம் தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்குப்பின் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.ராவணனை வதம் செய்த ஸ்ரீராமர், பாவ நிவர்த்திக்காக சிவபெருமான் தலையில் இருந்து வெளியேறிய புனித நீரில் உருவான ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி சித்த சுத்தி பெற்றதாக ராமாயண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.இத்தகைய பிரசித்த பெற்ற ஜடாமகுட தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று மகாமக தீர்த்தவாரி நடந்தது. இதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி, பிரியா விடை அம்மனுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி ஜடாமகுட குளத்தில் எழுந்தருளினார்.
பின் கோயில் குருக்கள் அஸ்திர தேவர் நீராடும்(தீர்த்தவாரி) நிகழ்ச்சியை நடத்தினர். இதையடுத்து குளத்தை சுற்றி குவிந்த ஏராளமான பக்தர்கள் மீது ஸ்பிரிங்லர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.