போடி சுப்பிரமணியர் கோயிலில் முழுமை பெறாத திருப்பணி
போடி: போடி சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திருப்பணி முழுமை அடையாமல் தரைத்தளம் குண்டும், குழியுமாக உள்ளது.
போடியில் பழமையும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மன அமைதி இல்லாதவர்களுக்கு சகல சவுபாக்கியத்தையும் தந்து சுப்பிரமணிய சாமி அருள்பாலிப்பதாக ஐதீகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்து அறநிலையத்துறை சார்பில், கோயிலில் திருப்பணியாக ஆலயம், கோபுரங்கள் புதுப்பிக்கும் பணியும், சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், கொடிமரம் அமைக்கும் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போதே திருப்பணிகள் முழுமை பெறாத நிலையில் இருந்தது. கோயிலை சுற்றியுள்ள தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. கழிவுநீர் செல்வதற்கான பிளாஸ்டிக் பைப்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. பாதை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளதால் பக்தர்கள் நடந்து சென்று வழிபட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். குண்டும்,குழியுமாக உள்ள கோயில் வளாக பகுதியில் சிமெண்ட் சிலாப்புகள் அமைத்து தர அறநிலையத்துறை, திருப்பணி கமிட்டியிடமும் பக்தர்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. பாதியிலே நிறுத்தப்பட்ட கோயில் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடித்திட இந்து அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.