கவனிப்பாரற்ற கோதண்டராம சுவாமி கோவில் குளம்!
திருத்தணி: கோதண்டராம சுவாமி கோவில் குளத்தில், உடைந்துள்ள படிகளை சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, கோதண்டராம சுவாமி கோவில், திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில், தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீராமநவமியை ஒட்டி, 10 நாட்கள் பிரம்மோற்சவம், வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இக்கோவில் அருகில் உள்ள பெரிய குளத்தை, கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. அந்த குளத்தில் உள்ள படிகள் உடைந்துள்ளன; குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படாததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பராமரிப்பு இல்லாத இந்த குளத்தில், பகுதிவாசிகள் துணிகளை துவைத்து, அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவே, படிகளை சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குளத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடக்கிறது. டெண்டர் விடப்பட்டு, குளத்தை சீரமைக்க உள்ளோம்’ என்றார்.