சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
தென்தாமரைக்குளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திவிழாவின் முதல் நாளான நேற்று காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 6.30 மணிக்கு காவி உடை தரித்து தலைப்பாகை அணிந்த பக்தர்களின் "அய்யா சிவ சிவா அரகர அரகர என்ற பக்தி கோஷத்திற்கு இடையே திருக்கொடியேற்றம் நடந்தது. கொடியை பாலபிரஜாபதி அடிகளார் ஏற்றி வைத்தார், பாலஜனாதிபதி, ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் நடந்தது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி தெருவீதி வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சார்ந்த அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, மாலை, இரவு அய்யாவுக்கு பணிவிடை நடக்கிறது. இரவு வாகன பவனியும் அன்னதானமும் நடக்கிறது. வரும் 26ம் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்கத்து ஊர்களுக்கு வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.29ம் தேதி 11ம் திருவிழா நாளில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை, இரவு பணிவிடை, பகலில் உச்சிப்படிப்பு, இரவு யுகப்படிப்பு, வாகன பவனி, அன்ன தர்மம், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பூஜித குருக்கள் பாலபிரஜாதிபதி, பாலஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் மற்றும் ராஜவேல் ஆகியோர் செய்துவருகின்றனர்.