உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் கொடி மரம் முறிவு: பக்தர்கள் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் கோயில் கொடி மரம் முறிவு: பக்தர்கள் அதிர்ச்சி!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்க கொடி மரம் முறிந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் ரூ.7.90 கோடி செலவில் திருப்பணிகள் முடிக்கபட்டு கடந்த ஜன., 20ல் கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட 22 விமானங்கள், 4 ராஜகோபுரங்கள் சீரமைக்கப்பட்டது. ஆனால் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் மர கதவுகள், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொடி மரங்கள் மராமத்து செய்யாமல் விடபட்டது. இதனால் சுவாமி சன்னதி முன்பு நந்தி மண்டபத்தில் உள்ள பிரதான கதவு ஒன்று சுவரில் பிடிமானம் இழந்து சில நாட்களுக்கு முன்பு கிழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள தங்க கொடி மரம் முறிந்து சாய்ந்தது. இதனை மரத்தடி உதவியுடன் மேலே கயிறு கட்டி நிறுத்தி உள்ளனர். பிரதான கோயில் கதவு, கொடி மரம் முறிந்த சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழமைவாய்ந்த கதவுகளை மாற்றி புதிய கதவுகள் போடவும், முறிந்த கொடி மரத்திற்கு பதில் புதிய தங்க கொடி மரம் அமைக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !