பெற்றோருக்கு மாணவ, மாணவிகள் பாதபூஜை
பெரம்பலுார்: பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு மார்ச் 4 முதல் ஏப்., 1ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப். 13 வரையும் நடக்கிறது. இந்நிலையில், பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், 2 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் திருச்சி நேஷனல் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் நீலகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, விநாயகர் வழிபாட்டுடன் சரஸ்வதி தேவி பூஜை செய்யப்பட்டு, பெற்றோருக்கு பாத பூஜையும், ஆசிரியர்களுக்கு குருபூஜையும் நடத்தப்பட்டது.