ராஜபாளையம் அருகே நடக்கும் வினோதம்: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வன பூஜை!
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை தவிர மற்றவர்கள் கருப்பசாமியை வழிபடும் பழமையான வன பூஜை நேற்று முன்தினம் நடந்தது. விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்தூரில் ஒரு பிரிவினர் ஆனைகட்டி கருப்பசுவாமிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வனபூஜை நடத்துகின்றனர். பெண்கள் மற்றும் பெண்குழந்தையை தவிர மற்றவர்கள் மலைக்கு சென்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் தேவியாறு வடபுரத்திற்கு சென்று பகல் பூஜை செய்தனர். பின் இரவு 8 மணிக்கு, நள்ளிரவு, அதிகாலை என பூஜை செய்துவிட்டு, சுவாமிக்கு படையல் வைத்தனர். நேற்று காலை அங்கேயே அன்னதானத்தில் கலந்துகொண்ட பின் வீடு திரும்பினர். மலையடிவாரத்திற்கு செல்வதற்காக வனத்துறையினருக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்தனர். ஆண்கள் மலைக்கு செல்லும்போது, வீட்டில் பெண்கள் தனியாக இருப்பதால் பாதுகாப்பிற்கு பெண் எஸ்.ஐ., மற்றும் போலீசார் கோரினர். அதன்படி இரண்டு நாள்களாக பெண் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர் கன்னியப்பன், 73 , கூறுகையில், ""பழமையான வழிபாடு இது. நான் சிறுவனாக இருந்ததில் இருந்து இந்த வனபூஜையில் கலந்துகொள்கிறேன். எனது தந்தை சிறுவனாக இருந்தபோதே இந்த பூஜை நடந்ததாக கூறுவார். அந்த காலத்தில் இருந்து, இந்த பூஜையில் மட்டும் பெண்கள் கலந்துகொள்ளமாட்டார்கள். வீட்டில் இருக்கும் அவர்களுக்கு பாதுகாப்பாக பெண்களே இருப்பர். தற்போது பெண் போலீசார் வருகின்றனர், என்றார். முன்னாள் நாட்டாண்மை ராஜகோபால் கூறுகையில், "" இந்த பகுதியில் ஒரு சமயம் வறட்சி, நோய் தொல்லை அதிகமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த, சுவாமிக்கு வன பூஜை செய் என சாமியாடியிடம் தெரிவித்ததாக முன்னோர்கள் சொல்வார்கள். அது இன்றுவரை தொடர்கிறது. பூஜை நாளன்று சாமியாடி அங்குசத்துடன் மலைக்கு செல்வார். அவரை தொடர்ந்து பால்குடம், ஆடு மற்றும் பூஜைபொருள்களுடன் பக்தர்கள் செல்வோம். மலைஅடிவாரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள பெரியபாறையில் அமர்ந்து அன்னதானம் நடத்திவிட்டு, வீடுகளுக்கு திரும்புவோம் என்றார்.