தானம் செய்வதன் மூலம் ஒருவர் முக்தி பெற முடியுமா?
தானம் என்பதில் எத்தனையோ வகையான தானங்கள் அடங்கும். தானமும் தவமும் தான் செய்வோருக்கு வானவர் நாடு வழிதிறக்கும் என்பது தமிழர் கொள்கை. தானம் செய்வதுடன் ஜபம், தியானம், பிரார்த்தனை போன்ற ஆன்மிக சாதனைகளும் முக்தி பெறுவதற்கு அவசியம் தேவைதான். இந்தக் கருத்தை அருணகிரிநாதரின் கந்தரனுபூதியில் வரும்.
“கெடுவாய் மனனே! கதிகேள் கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதாள்
நினைவாய் கடுவாய் நெடுவேதனை
தூள்படவே;
விடுவாய் விடுவாய் வினையாவையுமே ”
என்ற வரிகள் உறுதிப்படுத்துகின்றன. பணக்காரன் இறைவனுக்கும் அவனது அடியார்களுக்கும் பணத்தால் சேவை செய்ய வேண்டும் ஏழையோ, இறைவனது நாமத்தைத் திரும்பத் திரும்ப ஜபம் செய்வதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்று, நம் போன்றவர்களுக்கு அன்னை சாரதாதேவியார் கூறிய ஓர் உபதேசமும் இருக்கிறது. செல்வம் சகடக்கால் போன்றது நிலைபேறு இல்லாதது காக்கை தனக்குக் கிடைத்ததைத் தான் மட்டும் உண்பதில்லை. அது தன் இனத்தாரையும் கூவியழைத்து, அனைவருடனும் சேர்ந்து உண்கிறது. ஆசைவயப்பட்ட மனிதன் மட்டுமே தனக்குக் கிடைத்ததை, தான் மட்டும் அனுபவிக்க விரும்புகிறான். நிலையற்ற செல்வத்தைப் பெற்றவர்கள் அது உள்ளபோதே அறச் செயல்களுக்குச் செலவிட வேண்டும். செல்வம் அதிகம் இல்லாதவர்கள் தம் சக்திக்கு ஏற்ப, அற்ப அளவிலாவது தானம் செய்ய வேண்டும்.
மனிதன் தினமும் தானம் செய்ய வேண்டும். தினமும் சிறிதளவாவது தானம் செய்ய வேண்டும் என்று, தெய்வம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது, பதவி, அதிகாரம், திறமை ஆகியவற்றுக்கும் பொருந்தும். தானம் செய்வதனால் ஒருவருக்குப் புண்ணியம் சேர்கிறது. அதனால் சொர்க்கம் போன்ற மேலுலக வாழ்க்கை அவருக்குக் கிட்டும். அல்லது மீண்டும் மனிதனாகப் பிறந்தாலும், வளமும் சிறப்பும் மிக்க வாழ்க்கை அவருக்கு அமையும். தானம் போன்றவற்றையும் நிஷ்காமமாக பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்தால். அது சித்தகத்தி எனப்படும் மனத் தூய்மையைத் தரும், மேலும் அது பழைய தீவினைகளுக்கு மாற்றாகவும் அமையும். தானம் மனிதனைப் பரிசுத்தப்படுத்துகிறது என்பது உண்மைதான். இன்சொல், தானம், சத்தியம், பிரம்மச்சரியம், பரோபகாரம், யக்ஞம், தவம் ஆகியவை எல்லாம் அறச் செயல்களும் ஆகும். ஆத்ம சாதனையின் அங்கங்களும் ஆகும்.