திருப்பதி ஏழுமலையான் கோவில் மேல் விமானம் பறந்ததால் சர்ச்சை!
திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவில் மேல் விமானம் பறந்ததால், சர்ச்சை எழுந்துள்ளது. திருமலை, ஏழுமலையான் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக, மத்திய உளவுத் துறை எச்சரித்து வருகிறது. இதனால், திருமலைக்கு வரும் வாகனங்களை தேவஸ்தானம், தீவிர சோதனைக்கு உட்படுத்துகிறது. திருமலை மீது, விமான தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், விமானம் பறக்க தடை விதிக்குமாறு தேவஸ்தானம், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. கோவில் மேல் விமானம் பறப்பது, ஆகம விதிக்கு எதிரானது என, பண்டிதர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கோவில் மேல் விமானம் பறப்பது, தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, ஏழுமலையான் கோவில் மேல், விமானம் பறந்ததால், சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.