உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோள்களால் வராது கோளாறு!

கோள்களால் வராது கோளாறு!

விஸ்வேஸ்வரர் சுவாமி கருவறைக்கு முன்புள்ள மகா மண்டபத்தின் மேற்கூரையில், அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய, 12 ராசி கட்டங்கள் அமைந்துள்ளன. ஐந்து கல் தூண்களில், மலர்ந்த தாமரையை சுற்றிலும், நவக்கிரக ராசிகள், ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம்வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே-என, கோளறு பதிகத்தில், பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். கோளறு பதிகத்தில் அவர் கூறியுள்ளதன் சாரம்சம், சிவனடியை சிந்திக்கும் சிவனடியார்களை நாளும், கோளும் என்ன செய்து விடும்?; அவை நன்மையே பயக்கும் என்பதாகும். அதாவது, சிவ வழிபாட்டால், நவக்கிரகங்களின் பாதக பலன்கள் நம்மை ஒன்றும் செய்து விடாது என்பதை நமக்கு உணர்த்துகிறார். விஸ்வேஸ்வரரை வணங்கினால், கோள்களால் நமக்கு கோளாறு இல்லை.

இங்கு, சுவாமியின் கருவறைக்கு முன், அவரின் நேர்பார்வையில், ராசிக்கட்டம் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சிவனை வணங்குவோருக்கு ராசி, நட்சத்திரம், கோள்களால் பாதக அம்சங்கள் இருக்காது; நன்மையே உண்டாகும். விஸ்வேஸ்வரரை வணங்கினால், விழிகளில் மகிழ்ச்சியே. மகா மண்டபம் முழுவதும் கற்கலால் அமைக்கப்பட்டிருந்தாலும், ராசி கட்டம் அமைந்துள்ள மேற்பகுதி,  மிகவும் நீளமான ஐந்து கற்களால் தனித்தனியாக செதுக்கப்பட்டு, ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஆயினும், அற்புதமான சிற்ப வேலைப்பாடு என்பதால், நமது கண்களுக்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்ட, ராசி கட்டம் போலவே காணப் படுகிறது. ராசி கட்டங்களுக்கு மத்தியில், பெரிய அளவில், விரிந்த நிலையில் தாமரை பூ சிற்பம் காணப்படுகிறது. இந்த தாமரை மலரை பிரிக்க முடியாது என்பதால், அகலமான கல்லால் செதுக்கியுள்ளனர்.

சுப்ரமணியர் சன்னதிக்கு முன், கல் சங்கிலி காணப்படுகிறது. வளையங்கள் தனித்தனியாக செய்து இணைக்கப்பட்ட கற்சங்கிலி அல்ல; ஒரே கல்லில், மிக நேர்த்தியாகவும், பிரமிக்கத்தக்க வகையிலும் செதுக்கப்பட்டுள்ளது. வளையங்கள், வாரத்தின் ஏழு நாட்களை குறிப்பதாகும். கொங்கு மண்டல கோவில்களில், இங்கு மட்டுமே, கல் சங்கிலி காணப்படுகிறது. மிகவும் பழமையான, ஆதி சிவாலயமாக கருதப்படும் ஓமலுõர் அடுத்த தாரமங்கலத்தில் மட்டுமே, இதுபோன்ற கல் சங்கிலி உள்ளது. அதற்கு அடுத்த படியாக, திருப்பூரில் எழுந்தருளியுள்ள விஸ்வேஸ்வரர் கோவிலில் இடம் பெற்றுள்ளது. விசாலாட்சி அம்மன் கருவறைக்கு முன், தாமரை பூ மலர்ந்த நிலையில், அற்புதமாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !