ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா: 4 நாள் கொண்டாட்டம்
கோவை: மகா சிவராத்திரியை யொட்டி, கோவை ஈஷா யோகா மையத்தில் நான்கு நாட்கள் திருவிழா நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி, ஈஷா யோகா மையத்தில், வண்ணமிகு திருவிழா இன்று துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு ரமாவைத்தியநாதனின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சியும், நாளை, மல்லாடி சகோதரர்களின் கர்நாடக இசைக் கச்சேரியும் நடக்கிறது. மார்ச் 6ம் தேதி, பாரம்பரிய இந்துஸ்தானி குரலிசை மன்னன் அஜோய் சக்ரபோர்த்தியின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை அடுத்து, லிங்கபைரவி உற்சவமூர்த்தி ஊர்வலமும், மஹா ஆரத்தியும் நடக்கிறது. லிங்கபைரவி தேவி உற்சவமூர்த்தியின் ஊர்வலம், தியானலிங்கம் முன்பு வரும்போது, நடக்கும் ஆரத்தியில் நெருப்பு நடனமாடுவது முக்கிய அம்சம்.
மகாசிவராத்திரி விழாவான மார்ச் 7, மாலை 6:00 மணியிலிருந்து, 8ம் தேதி காலை 6:00 மணி வரை நடைபெறும் இவ்விழாவில், கிராமிய இசைக்கலைஞர் முக்தியார் அலியின் இசைநிகழ்ச்சியும், அகம் குழுவினரின் கர்நாடக பியூஷன் இசைக்கச்சேரியும், இவற்றோடு ஈஷாவின் இசைக்குழுவான, சவுன்ட்ஸ்ஆப்ஈஷா குழுவினர், இசைநிகழ்ச்சியும் நடக்கிறது. தியானலிங்கத்துக்கு பஞ்சபூத ஆராதனை மாலை 5:30 மணி முதல் 6:20 வரை நடைபெறும். பிரம்ம்சாரிகளின், மந்திர உச்சாடனையோடு, இரவு 7:00 மணிக்கு, சத்குரு ஜக்கிவாசுதேவ், மேடை ஏறுகிறார். நடுநிசி இரவில், சக்திமிக்க மஹாமந்திர உச்சாடனையுடன், தியானத்திற்கான தீட்சையை மக்களுக்கு சத்குரு வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை http://anandhaalai.com/ms மற்றும் www.isha.sadhguru.org என்ற இணையதளங்களிலும் நேரடியாக இணைய ஒளிபரப்பை ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், 126 மையங்களில் ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.