வெள்ளி மயில் வாகன வெள்ளோட்டம்
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அவிநாசி ஸ்ரீமுருகன் கிருத்திகை கமிட்டி சார்பில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி மயில் வாகனம் வழங்கப்பட்டது. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 15 கிலோ வெள்ளியில், மயில் வாகனத்தை, கும்பகோணத்தை சேர்ந்த ஸ்தபதி சரவணபாலாஜி உருவாக்கினார். கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டு, சிறப்பு ஹோம பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து, மயில் வாகனத்தின் மீது தீர்த்த கலசம் வைக்கப்பட்டு வீதியுலா நடந்தது. நேற்று கிருத்திகை என்பதால், முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், கிருத்திகை கமிட்டி நிறுவன தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.