மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா 14ல் துவக்கம்
மயிலாப்பூர்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழா, வரும், 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வரும், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை, பங்குனி பெருவிழா நடைபெறும். அதற்காக, வரும், 13ம் தேதி, மயிலை கோலவிழி அம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதையடுத்து, 14ம் தேதி காலை, 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், இரவு, 10:00 மணிக்கு, மயில் வடிவில் அம்பாள் சிவ பூஜை செய்யும் காட்சி நடக்கும். 15ல், சூரிய வட்டம், சந்திர வட்டம், 16ல், அதிகார நந்தி எழுந்தருளல், 18ல், வெள்ளி விடைப்பெருவிழா, 20ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் ஆகியவை நடைபெறும். மேலும், 21ம் தேதி, திருஞானசம்பந்தர் எழுந்தருளி பூம்பாவைக்கு அருளுதல், பிற்பகல், 3:00 மணிக்கு, கபாலீஸ்வரர் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுடன் திருக்காட்சி அளித்து, மாட வீதிகளில் திருவீதியுலா நடக்கும். வரும் 22ல், இறைவன் இரவலர் கோல விழா நடக்கும். மேலும், 23ம் தேதி, இரவு, 8:00 முதல், 9:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.