தி.மலை கோவிலில் கும்பாபிஷேக பணி: லட்ச தீபம் ஏற்ற தடையால் பக்தர்கள் ஏமாற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக பணி நடப்பதால், லட்ச தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்தபடியாக, மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாவில் கோவில் வளாகம் அமைந்துள்ள, 27 ஏக்கரில் அனைத்து சன்னதிகளின் முன்பும், கோவிலினுள் உள்ள அனைத்து பிரகாரம், பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், என அனைத்து இடங்களிலும் லட்ச தீபம் ஏற்றப்படும். அப்போது, பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தாங்கள் விரும்பும் வகையில், 20 அடி முதல், 30 அடி நீளத்திற்கு வண்ண கலர் பவுடர் கலந்த உப்புகளால், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், லிங்கோத்பவர், ரமணர், யோகிராம், நடராஜர், ஓம் நமசிவாய, என அவரவர் விருப்பப்படி ஓவியம் தீட்டி, அதில் தீபமேற்றி வழிபடுவர். இதற்காக, 5 டன் கலர் பவுடர் கலந்த உப்பு பயன்படுத்தப்படும். 25,000 லிட்டர் நல்லெண்ணெய் பயன்படுத்தி, ஒரு லட்சம் அகல் விளக்கு கொண்டு, லட்ச தீபம் ஏற்றப்படும். பக்தர்கள் விரதமிருந்து, லட்சம் தீபமேற்றி வழிபடுவர். இந்தாண்டு அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக பணி நடந்து வருவதால், விளக்கு ஏற்றும்போது, ஆங்காங்கே புகை படியும் என்பதாலும், கோபுரம், மற்றும் சன்னதிகளில் மரங்களால் ஆன சாரம் கட்டப்பட்டுள்ளதால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், லட்ச தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது. இதனால் லட்ச தீபம் ஏற்ற வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.