திருமலை சக்கர தீர்த்தத்தில் காட்சி தந்த தங்க பல்லி!
திருப்பதி: திருமலையில் உள்ள சக்கர தீர்த்தத்தில், தங்க நிற பல்லி, ெவளியே வந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள, தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்களை தொட்டால், தோஷங்கள் நீங்கி, நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. திருமலை, பாபவிநாசத்தில் உள்ள, சக்கர தீர்த்தத்தில் தங்க நிற பல்லி உள்ளது. சேஷாசலம் வனத்தில் வாழ்ந்து வரும், உயிரினங்களில் அரிய வகையை சேர்ந்தது. அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பல்லி சக்கர தீர்த்தத்தில் உள்ள, பாறைகளின் இடுக்கில் வாழ்ந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் வெளியில் வரும். இந்நிலையில், மகாசிவராத்திரி அன்று, சக்கரதீர்த்தத்தில் உள்ள, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்போது, பாறை இடுக்கில் இருந்து, தங்கபல்லி திடீரென வெளியில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தது. இரவில், தகதகவென மின்னிய அந்த பல்லியை, அங்கு கூடியிருந்த பக்தர்கள், தரிசித்தனர்.சக்கர தீர்த்தத்தில் மட்டுமின்றி, திருமலை ஏழுமலையான் கோவிலிருந்து, 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ருத்திரகள தீர்த்தத்திலும் தங்க நிற பல்லிகள் காணப்படுகின்றன.
அறிவியல் உண்மை: தங்க நிற பல்லியின் அறிவியல் பெயர், காலோடாக்டீலோடஸ் ஆரிஸ். இவை இரவில் மட்டுமே, வெளியில் வரும் அற்புத உயிரினம். முதிர், இள மஞ்சள் கலந்து தங்க நிறத்தில் ஜொலிக்கும். 150 முதல், 180 மி.மீ., உயரம் வரை வளரும். பெரும்பாலும், கற்பாறை இடுக்குகளில் வாழும். சூரிய ஒளிபடாத, குளிர்ந்த பிரதேசங்களில், அதிக அளவில் காணப்படும். 50 முட்டைகள் வரை இடும். சாதாரண பல்லியை காட்டிலும், விந்தையாக சத்தமிடும்.