செத்தவரை கோவிலில் சிவராத்திரி பெருவிழா
செஞ்சி: செத்தவரை, மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் நடந்த சிவராத்திரி பெருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி தாலுகா, நல்லாண் பிள்ளை பெற்றாள்- செத்தவரையில், மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு, சிவஜோதி மோனசித்தர் தலைமையில் சிறப்பு வேள்வியும், தொடர்ந்து கைலாய வாயில் திறப்பும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவ வாத்தியங்கள் முழங்க, முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவஜோதி மோன சித்தரின் அருளுரை நடந்தது. இரவு 11:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடந்தது. மூன்றாம் கால பூஜையின்போது, பக்தர்கள் தங்களது கரங்களால் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி உறுப்பினர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றாள்- செத்தவரை கிராம மக்கள் செய்திருந்தனர்.