பழநி பங்குனி உத்திர விழா: ஐந்துநாள் தங்கரதம் நிறுத்தம்!
ADDED :3609 days ago
பழநி: பங்குனிஉத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு 5 நாட்கள் நிறுத்தப்படுகிறது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ.2,000 காணிக்கை செலுத்தி ஏராளமான பக்தர்கள் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முக்கிய திருவிழாக்காலங்களில் பக்தர்களின் கூட்டம் காரணமாக தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். பங்குனிஉத்திர திருவிழா திருஆவினன்குடிகோயிலில் வரும் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 25 வரை நடக்கிறது.இவ்விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்த காவடிகளுடன் வந்து பங்கேற்பர். இதன்காரணமாக மார்ச் 21 முதல் 25 வரை ஐந்து நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் என, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.