உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக பொற்றாமரை குளங்களில் இன்று முதல் நீராட அனுமதியில்லை!

மகாமக பொற்றாமரை குளங்களில் இன்று முதல் நீராட அனுமதியில்லை!

தஞ்சாவூர்: மகாமக குளம், பொற்றாமரை குளத்தை சுத்தம் செய்து நீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளதால், இன்று முதல்,  23ம் தேதி வரை குளத்தில்  நீராட அனுமதியில்லை என, அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில், மகாமக பெருவிழா, கடந்த பிப் ரவரி, 13ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. மகாமக தீர்த்தவாரி முடிவுற்ற பின்னரும் தொடர்ந்து மகாமக திருக்குளம், பொற்றாமறை  குளம் மற்றும் காவிரி படித்துறை ஆகிய இடங்களில், 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். நேற்று வரை, பக்தர்கள் கிழக்கு  கரையில் இறங்கி புனித நீராடி மேற்கு கரையில் ஏறும் வகையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மகாமக குளம், பொற்றாமறை குளம் மற்றும்  காவிரி படித்துறையில் நீராடிவிட்டு ஆதிகும்பேஸ்வரர், சாரங்கபாணி திருக்கோவில்களில் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்களின்
வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் இன்று முதல், மகாமக குளம் மற்றும் பொற்றாமறை குளத்தின் நீர் முழுவதும் இறைத்து சுத்தம் செய்த பின்,   புதிய நீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். வரும், 23ம் தேதி மகாமக திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளதால் குளத்தில் நீர் நிரப்ப  வேண்டியுள்ளது.  அதுவரை மகாமக குளம், பொற்றாமரை குளங்களில் நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை. நீர் நிரப்பிய பின், மகாமக பெரு விழாவிற்கு முன் கடைபிடிக்கப்பட்டது போல், கரை ஓரங்களில் மட்டுமே பக்தர்கள் தொடர்ந்து புனித நீராட அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !