கிருபாபுரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்
உளுந்துார்பேட்டை:திருவெண்ணைநல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழா துவங்கியது. உளுந்துார்பேட்டை தாலுகா திருவெண்ணைநல்லுார் ஸ்ரீமங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு பிரமோற்சவ கொடியேற்றமும், இரவு பஞ்சமூர்த்திகளுடன் கோபுர தரிசனமும் நடந்தது. நேற்று இரவு நந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (16ம் தேதி) பூத வாகனத்திலும், 17 ம் தேதி நாக வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 18ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் கோபுர தரிசனமும், ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், 19ம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழச்சியும், 21ம் தேதி குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி காலை 10.30 மணிக்கு தேரோட்டம், 24ம் தேதி இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.