உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கத்தை வழிபட்ட சூரியக்கதிர்கள்: திருச்சி அருகே பக்தர்கள் பக்தி பரவசம்!

சிவலிங்கத்தை வழிபட்ட சூரியக்கதிர்கள்: திருச்சி அருகே பக்தர்கள் பக்தி பரவசம்!

திருச்சி: திருச்சி அருகே சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிபட்ட நிகழ்வு, பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தது. திருச்சியில் இருந்து சர்க்கார்பாளையம் வழியாக கல்லணை செல்லும் வழியில், பனையக்குறிச்சியில் காசி விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலாகும். ஆண்டுதோறும், ஆவணி மாதம் 7,8,9ம் தேதிகளில் சூரிய உதயத்தின்போது, சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழுவது வழக்கம். இந்நிகழ்வு லிங்கத்தை சூரியன் வழிபாடு செய்வதாக கருதப்படுகிறது. நேற்று ஆவணி மாதம் 7ம் தேதியையொட்டி, சூரியன் உதயமாகும் நேரமமான அதிகாலை 5.30 மணி முதல் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். நேற்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சூரிய உதயம் தாமதமானது. சரியாக காலை 6.24 மணிக்கு கோவிலின் உள்ளே மின்னல் கீற்று போல சூரியக்கதிர்கள் நுழைந்தன. முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் மீது படர்ந்தது. சிவலிங்கத்தின் நெற்றியில் திலகம் இட்டதை போல சூரியக்கதிர்கள் ஜொலித்த காட்சி, பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. "தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று பக்தர்கள் கோஷமிட்டனர். லிங்கத்தின் உச்சியில் இருந்து சூரியக்கதிர்கள் மெதுவாக கீழிறங்கி, லிங்கத்தின் கீழ்புறத்தில், சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வதைப் போன்ற அற்புதக்காட்சியை கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். லிங்கத்தின் மீது சூரியக்கதிர் விழுந்த நேரத்தில் இருந்து சூரியக்கதிர் மறையும் வரை காசி விஸ்வநாதருக்கு தொடர்ந்து சிறப்பு தீபராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) சூரிய வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய வழிபாட்டை காண விரும்பும் பக்தர்கள், திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து சர்க்கார்பாளையம் வழியாக செல்லும் கல்லணை பஸ்களில் செல்லலாம். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ஆனந்த், உபயதாரர்கள் சுந்தரமீனாட்சி, ராஜாராம் உள்ளிட்ட கிராம மக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !