விநாயகர் கோவிலில் மாவிளக்கு பூஜை
வேலாயுதம்பாளையம்: கரூர் அருகிலுள்ள விநாயகருக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏந்தி வந்தும், பெண்கள் வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். கரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் வேலாயுதம்பாளையம் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள மரவாபாளையத்தில், விநாயகர் கோவில் உள்ளது. அதன் திருவிழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் விநாயகருக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்வேறு மலர்களால் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை பெண்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து விநாயகரை வழிபட்டனர். மாலையில் மாவிளக்கு வைத்தும் வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தி விநாயகரை வழிபட்டனர்.