சிங்காரவேலன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா
உடுமலை: மறையூரில் உள்ள சிங்காரவேலன் கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 22 மற்றும் 23ம் தேதி நடக்கிறது. உடுமலை - மூணாறு ரோட்டில் உள்ள மறையூர், அஞ்சுநாடு, முருகன் மலையில் அமைந்துள்ளது சிங்காரவேலன் கோவில். இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மறையூர், காந்தலுார், கோயில்கடவு, தலையாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துகின்றனர்.பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 22ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. மாலை, 4:00 முதல் 6:00 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மார்ச் 23ம் தேதி காலை, 7:30 மணிக்கு, கோயில்கடவில் உள்ள தென்காசிநாதன் கோவிலில் இருந்து பால் காவடி குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், மாலா மந்திர ேஹாமங்கள் நடக்கின்றன. 11:30 மணிக்கு, பூர்ணாஹுதி, அபிேஷகம், புஷ்ப அலங்காரமும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாலை, 5:30 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, பக்தர்கள் கோவிலுக்கு வழங்கிய காணிக்கை பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.