பெருமாளே! இதென்ன சோதனை விஷ்ணு நாம பாராயணம் பாட தடை!
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தவறாக பாடுவதாக கூறி, விஷ்ணு நாம பாராயணம் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு சிலர் குழுவாக விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பாடி வலம் வருவர். பவுர்ணமிதோறும் 108 முறை பாடி வலம் வருகின்றனர். இக்குழு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை தவறாக பாடுவதாகவும், அதற்கு தடைவிதிக்கவும் அர்ச்சகர்கள் சார்பில் கோயில் செயல் அலுவலர் அனிதாவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உட்பிரகாரத்தில் விஷ்ணு நாமத்தை பாட வேண்டாம். மாட விதியில் பாடலாம், என உத்தரவிடப்பட்டது.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் பாட முயன்ற குழுவை கோயில் ஊழியர்கள் தடுத்தனர். அனிதா கூறியதாவது: தமிழ் ஆசிரியரிடம் தமில் என தவறாக உச்சரித்தால் கோபம் வரும் என்பது அறிந்ததே. வேத மந்திரங்களை பிழையோடு உச்சரித்து பாடுவதாக அர்ச்சகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அனைவரின் நன்மைக்காகத்தான் விஷ்ணு நாமத்தை பாட வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கோயிலுக்குள் தவறான மந்திர உச்சரிப்புடன் விஷ்ணு நாமம் பாடுவதை தடுக்க வேண்டியது கடமை, என்றார்.இந்நிலையில் நேற்று மாலை நடந்த இருதரப்பு பேச்சில் சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து பாராயணம் பாட அனுமதி வழங்கப்பட்டது.