உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி பெருவிழா: சிறுநீர் நாற்றத்தில் சிக்கி தவிக்கும் மயிலை!

பங்குனி பெருவிழா: சிறுநீர் நாற்றத்தில் சிக்கி தவிக்கும் மயிலை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளிலும், நான்கு மாட வீதிகளும், சிறுநீர் நாற்றத்தில் நான்கு மாட வீதிகளும் சிக்கித் தவிக்கின்றன. தேரோட்டத்திற்கு முன்பாவது, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழா நடந்து வருகிறது. கோவிலைச் சுற்றி, பொன்னம்பல வாத்தியார் தெரு, குமரகுருநாதன் தெரு, கிழக்கு குளக்கரை தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. மேலும், கிழக்கு, தெற்கு, மேற்கு (ஆர்.கே.மடம் சாலை), வடக்கு என நான்கு மாட வீதிகளும் உள்ளன.

பொன்னம்பல வாத்தியார் தெருவில், கோவில் செருப்பு பாதுகாப்பு மையம் அருகே, ஒரு இலவச கழிப்பறை, மாங்கொல்லையில் மாநகராட்சி இலவச கழிப்பறை, வடக்கு மாட வீதியில் குளக்கரையில் ஒரு மாநகராட்சி கழிப்பறை என மொத்தமே, மூன்று கழிப்பறைகள் உள்ளன அவை ஒவ்வொன்றிலும், ஆண், பெண்ணுக்கு என தலா ஒவ்வொரு கழிப்பறை மட்டுமே உள்ளது. கோவில் அருகே உள்ள இலவச கழிப்பறை எப்போதும் பூட்டியே கிடக்கும். மற்ற இரண்டின் சுகாதாரம் சொல்லும் நிலையில் இல்லை போதிய கழிப்பறைகள் இல்லாததால், நான்கு மாட வீதிகள், குளக்கரையை ஒட்டிய பகுதிகள், குமரகுருநாதன் தெரு உள்ளிட்ட தெருக்கள் ஆகியவற்றில், ‘வசதியான’ இடங்கள், சிறுநீர் கழிப்பிடங்களாக மாறிவிட்டன. அதனால் கோவிலைச் சுற்றி எங்கு சென்றாலும், ‘சிறுநீர் வாடை’ கட்டாயமாக வீசும் என, கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.  இந்த நிலையில், நாளை மறுநாள் தேரோட்டமும், அதற்கு மறுநாள், அறுபத்து மூவர் விழாவும் நடக்க உள்ளன. அதற்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும், மாட வீதிகளில், நடமாடும் கழிப்பறைகள் இதுவரை வைக்கப்படவில்லை.  இப்போதே, திருவிழா நேர கடை வியாபாரிகள், குறிப்பாக பெண்கள், பகல் மற்றும்  இரவு நேரங்களில் கழிப்பறை தேடும் அவலம் தினம்தோறும் அரங்கேறுகிறது. முக்கிய விழா நாட்களில், பக்தர்கள் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என, தெரியவில்லை.கழிப்பறைகளாவது மூன்று இருக்கின்றன; குடிநீர் வசதி ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பக்தர்களே உஷார்!

கோரிக்கை என்ன?
பக்தர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள்: நான்கு மாட வீதிகளிலும், போதிய நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட வேண்டும்; அவை சுகாதாரமாக பேணப்பட வேண்டும் தேவையான இடங்களில், குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்  மாடவீதிகளில், குப்பை அகற்றம் இதுவரை முறைப்படுத்தப்படவில்லை. மோர், உணவு தானமாக கொடுக்கப்படும் இடங்கள் உட்பட, அனைத்தும் உடனுக்குடன் சுத்தப்படுத்தப்பட வேண்டும். அதற்கு போதிய குப்பை தொட்டிகள் தேவை சுகாதார ஊழியர்களுக்கு, கையுறைகள், முகமூடிகள் வழங்கப்பட வேண்டும் வெயில் அதிகரித்துள்ளதால், மாடவீதிகளில் சில இடங்களில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் கோவிலுக்கு அருகே செருப்பு வைக்க இரு இடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் போதிய இடவசதி இல்லை. செருப்பு பாதுகாப்பு முறைப் படுத்தப்பட வேண்டும் வெள்ளீஸ்வரர் கோவில் அருகே, நடைபாதை  அமைக்கும் பணிக்காக, கற்கள் பிரித்து போடப்பட்டுள்ளன. இதனால், காற்று  வீசும் போது, இந்த இடமே புழுதி மண்டலமாக மாறுகிறது. இதனால், வயதானோரும், குழந்தைகளும் சிரமப்படுகின்றனர்.  விழா முடிந்த பின் சுத்தம் செய்வதை விட, விழாவே சுத்தமாக நடப்பதற்கு அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  – நமது நிருபர் குழு –


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !