ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க கும்பாபிஷேகம் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கோலாகல விழா
திருப்பூர்:"ஓம் நமச்சிவாய, "ஹர ஹர மகாதேவ என, பக்தர்களின் கோஷம் முழங்க, திருப்பூர்
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா மார்ச்18ல், கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, 13ல்,
முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. மார்ச், 18 காலை, 6:05க்கு, ஆறாம் கால யாக பூஜை துவங்கியது. நிறைவேள்வி பூஜையை தொடர்ந்து, 9:45க்கு, மூலவர் விமானம், ண்முகசுப்ரமணியர் விமானம், விசாலாட்சி அம்மன் விமானம், கனகசபை விமானம், ராஜகோபுரம் என, அனைத்து கோபுரங்களுக்கும், ஏககாலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, பச்சைக்கொடி காட்டியதும், அனைத்து கோபுர கலசங்கள் மீதும், புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, "ஓம் நமச்சிவாய கோஷத்துடன், மகா தீபாராதனை காட்டப்பட்டது. கருவறையில், சிவப்பு, பச்சை, வெண்ணிற ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க அங்கி அணிந்து, நாகர் குடை பிடிக்க, சிறப்பு மலர் அலங்காரத்தில் விஸ்வேஸ்வரர் அருள்பாலித்தார். வள்ளி, தெய்வானையுடன், சுப்ரமணியரும், சிறப்பு அலங்காரத்தில் விசாலாட்சியம்மனும் அருள்பாலித்தனர்.
கும்பாபிஷேகத்தை காண, ராஜகோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுர ரோடுகள், நொய்யல் பாலம் ரோடு, பெரிய கடை வீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றிலும் உள்ள, கட்டடங்களிலும் ஏராளமான பக்தர்கள் நின்றிருந்தனர். "ஸ்பிரிங்லர் கலனில் புனித நீர் கலக்கப்பட்டு, பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கோவிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள், விழா நிகழ்வுகளை கண்டுகளிக்க, ஏழு இடங்களில், எல்.இ.டி., திரை அமைத்து, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஐந்து இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது; 75 கிலோ எடையுள்ள, 170 மூட்டை அரிசி, மூன்று டன் பருப்பு, மூன்று டன் சர்க்கரை, ஆறு டன் தக்காளி, ஏழு டன் வெங்காயம், 10 டன் முருங்கை, அவரை, கேரட், பூசணி உள்ளிட்ட காய்கறிகள், 200 டின் சமையல் எண்ணெய், 50 டின் நெய் மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பக்தர்கள், 120 மூட்டை அரிசி மற்றும் பொருட்கள் வழங்கியிருந்தனர். ஸ்ரீவாரி டிரஸ்ட், சிவனடியார் திருக்கூட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த, 1,100 பேர், பக்தர்களுக்கு உணவு பரிமாறும் பணியை மேற்கொண்டனர்.
மாநகராட்சி மூலம், பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கே.வி.ஆர்., நகர், நெசவாளர் காலனி, எல்.ஆர்.ஜி.ஆர்., நகர் மற்றும் சூசையாபுரம் நகர்நல மைய மருத்துவ குழுவினர் முகாமிட்டு, தேவையான மருந்து, மாத்திரை வழங்கினர். பல்வேறு அமைப்புகள், காஸ் ஏஜன்சிகள் சார்பில், நீர்மோர், தண்ணீர், கூல்டிரிங்ஸ் வழங்கப்பட்டது. ஏஞ்சல் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர், பச்சை நிற "ரிப்ளக்டர் ஜாக்கெட் அணிந்து, பக்தர்களுக்கு வழிகாட்டினர். மாநகராட்சி மூலம், "மொபைல் டாய்லெட், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
அடையாள அட்டை இல்லாத காரணத்தால், யாகசாலையில் இருந்து, தீர்த்த கலசங்களுடன்
இன்னிசைத்து வந்த, நாதஸ்வர இசைக்குழுவினர், கோவிலின் மேல்தளத்துக்கு அனுமதிக்கப்
படவில்லை; 63 நாயன்மார்கள் மண்டபம் அருகே நின்று வாசித்தனர். விழாவை சிறப்பிக்கும் வகையில், "தினமலர் நாளிதழ் சார்பில், கோவில் தல வரலாறு மற்றும் சுவாமியின் சிறப்பு, தலவிருட்சம், கலைநுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை பற்றிய வரலாற்று தகவல், இரு வாரங்கள் வெளியிடப்பட்டன. நான்கு பக்க இலவச பிரதி மார்ச்18ல், வெளியிடப்பட்டது. அதனுடன், ஆழ்ந்த தவத்தில் ஈஸ்வரன் காட்சியளிக்கும் வண்ணப்படம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள், இலவச சிறப்பு மலரை ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.