உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம்

சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம்

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரியை, அழகாபுரத்தில் உள்ள தங்குமிடத்துக்கு மாற்றம் செய்ய, தேர்தல் விதி அமலை காரணம் காட்டி அதிகாரிகள் தயங்குவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், காசநோயின் தாக்கம் அதிகரித்ததால், அதை வனச் சூழலில் பராமரிக்க நாமக்கல் கால்நடை பல்கலைக்கழக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையேற்று, கோவில் நிர்வாகம் அழகாபுரத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், யானை, அதன் பாகன் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தங்குமிடத்தை வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் ஆய்வு மேற் கொண்டு, யானையை அங்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி, யானை அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதோடு, தண்ணீர் தொட்டியும் ஏற்படுத்தப்பட்டது. யானையை அங்கு கொண்டு செல்வதில் மட்டும், கோவில் நிர்வாகம், வனத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஈகோவால், தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யானையை கோவிலுக்கு அழைத்து வரவும், வாக்கிங் அழைத்துச் செல்லவும் கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், அதற்கான கொட்டகையிலேயே யானை நிறுத்தப்பட்டு உள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானையை அழகாபுரத்துக்கு கொண்டு செல்வது குறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கால்நடைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்தில், யானை ராஜேஸ்வரியை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், யானை ராஜேஸ்வரியை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னரே யானை இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !