பெரிய மாரியம்மன் கோவில் விழா: புனித நீர் ஊற்றி வழிபாடு!
ஈரோடு: ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை ஒட்டி நேற்று கம்பம் நடப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் பலர் கூட்டமாக வந்து புனித நீர் ஊற்றி வழிப்பட்டனர்.ஈரோடு வளையகார வீதி சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, பெரிய மாரியம்மன் குண்டம் தேர் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், விளம்பர பேனர்கள், அலங்கார வளைவுகள் அதிகப்படியான இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல சிரமமாக உள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் வகையறாவை சேர்ந்த மூன்று கோவில் குண்டம் திருவிழா கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்., 2ம் தேதி கம்பங்களை எடுத்து, மஞ்சள் நீர் விழாவுடன், காரைவாய்க்காலில் விடப்படும். இவ்விழாவுக்காக, ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் பகுதியில், 41 கடை ஏலம் விடப்பட்டுள்ளது. தவிர, ஏலம் எடுத்த கடைக்காரர்கள் சிறிய அளவிலான ஜூஸ் உட்பட பல கடைகளை உள் வாடகைக்கும் விடுகின்றனர். இக்கடைகள், கடந்த, 15ம் தேதி துவங்கி, கம்பம் விடப்பட்டாலும், அதன்பின், 20 நாட்கள் வரை கடைகளை நடத்துவார்கள்.
இதற்காக, மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, இரு வழிப்பாதையாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. வழக்கமாக, ரோட்டின் அளவு முழுமையாகவும், பிளாட்பார்ம் மற்றும் ஒதுக்குப்புறமான இடத்தை மட்டுமே கடைகள் அமைப்பார்கள். இந்தாண்டு, ஒரு பஸ் ஊர்ந்து செல்லும் அளவுக்கு மட்டும் இருபுறமும் ரோட்டை விட்டுவிட்டு, மற்ற இடங்களில் விளம்பர போர்டு, அலங்கார ஆர்ச் போன்றவைகளை அளவுக்கு அதிகமாக வைத்து விட்டனர். இக்கோவில் கடைகள், விளம்பரம் செய்வதற்கான ஏலம் பினாமி பெயரில் எடுக்கப்பட்டு, மாநகராட்சி மண்டலத்தலைவர் மனோகரன் மற்றும் சில கவுன்சிலர்கள் ஆதரவுடன் நடத்தப்பதாகவும் தெரிகிறது. எனவே, போக்குவரத்து போலீசாரால் ஏதும் செய்ய முடியவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ள ஆர்ச், பந்தல், ஏலம் எடுக்கப்பட்ட கடைகளுக்கான ஆக்கிரமிப்பு பகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வழியாக செல்லும் பஸ், டூவீலர் உட்பட பிற வாகனங்கள், பக்தர்கள், நடந்து செல்வோர் பாதிக்காத வகையில், ரோட்டை தேவையான அளவு விரிவாக்கம் செய்ய வேண்டும். இன்னும், 30 நாட்களுக்கு மேல் தினமும் மக்கள் இச்சிரமத்தை சந்திக்காமல், ஓரிரு நாளுக்குள் உரிய நடவடிக்கை எடுத்தால், சிரமம் குறையும். தவிர, பந்தல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வாகன விபத்து, தீ விபத்து போன்றவை ஏற்பட்டால் வேகமாக வெளியேறக்கூட வாய்ப்பில்லாமல், கம்பு, இரும்பு கம்பி, இரும்பு தடுப்பு, சிமென்ட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினரை திருப்திப்படுத்துவதை தவிர்த்து, பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப, தேவையற்ற பந்தல், அலங்கார வளைவுகளை அகற்ற, எஸ்.பி., சிபி சக்ரவர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.