தர்மராஜா கோவிலில் இன்று குண்டம் விழா
திருப்பூர்: வாரப்பட்டி தர்மராஜா கோவிலில், குண்டம் இறங்கும் விழா, இன்று நடைபெறுகிறது. சுல்தான்பேட்டை அடுத்த வாரப்பட்டியில் உள்ள தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில், குண்டம் திருவிழா, 4ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு பாரதம் படித்தல், சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. நேற்று மாலை, அரவான் உரு செய்தல், அரவான் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்றிரவு, 10:00 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டு, அக்னி கரகம் ஊர்வலம் வந்து, குண்டத்துக்கு பூ போடுதல் நடைபெற்றது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு பால் கம்பம் நடுதலுடன் துவங்கும் விழாவில், அர்சுனன் தபசு மரம் ஏறுதல், கைலயங்கிரி மண்டபம், மாடு பிடி சண்டை, சக்ராபுரம் கோட்டை இடித்தல், அரவான் களபதி மற்றும் துரியோதனன் வதம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, வீரகந்தம் வாங்கி வருதலை தொடர்ந்து, பகல், 11:30 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிற்பகல், 3:00 மணிக்கு அக்னி அபிஷேகம்; நாளை காலை, 6:00க்கு மாவிளக்கு, பொங்கல் பூஜையை தொடர்ந்து, மாலை, 4:00க்கு மஞ்சள் நீர் உற்சவம்; இரவு, 7:00க்கு, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.