கோவை சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறு
கோவை: பாம் சண்டே எனும் குருத்தோலை ஞாயிறு, கோவையில் நேற்று அனைத்து சர்ச்களிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் யூதர்கள் ஆண்டுதோறும், பஸ்கா பண்டிகையை கொண்டாட, ஜெருசலேம் சர்ச்சுக்கு வருவர். 2,000 ஆண்டுகளுக்கு முன், இயேசுவும் தனது சீடர்களுடன் ஜெருசலேம் வந்தார். இதை கேள்விப்பட்ட நகர மக்கள் ஏராளமானோர் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்தும், மரக்கிளைகளையும், விலை உயர்ந்த கம்பளங்களையும் போட்டும், ஓசன்னா- ஓசன்னா (கடவுள் பெயரில் வருகிறவர் புகழப்படதக்கவர்) என்று உற்சாகமாக பாடி வரவேற்பளித்தனர். இந்நிகழ்வே குருத்தோலை ஞாயிறு.இன்றும், உலகத்திலுள்ள அனைத்து சர்ச்சுகளிலும், சபை பாகுபாடின்றி, குருத்தோலைகளை கையிலேந்தி ஊர்வலமாகசெல்கின்றனர். இந்நிகழ்வு நேற்று நடந்தது.
* கோவையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., லுத்தரன் உட்பட பல பிரிவு சர்ச்சுகளை சேர்ந்த மக்களும் சிறுவர் முதல் பெரியோர் வரை உற்சாகமாக குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி, ஓசன்னா என பாடி துதித்து தங்கள் சர்ச்சுகளுக்கு வெளியே, சிறிது தூரம் பவனியாக சென்று மீண்டும் சர்ச்சுக்கு வந்து ஆராதனையில் பங்கேற்றனர்.
* இன்று முதல், வரும் ஞாயிறு வரை பரிசுத்த வாரமாக கருதப்படுகிறது. வரும், 24ம் தேதி, மாண்டி- தேர்ஷ்டே எனப்படும் பெரிய வியாழனும், 25ம் தேதி இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வினை குறிப்பிடும், குட் பிரைடே எனும் பெரிய வெள்ளியும் அனுசரிக்கப்படுகிறது. வரும் 27ம் தேதி, ஞாயிறன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.