ரமலான் சிந்தனைகள்: கடமையை சரிவர செய்க!
இஸ்லாமிய மறை மெய்ஞானி ஒருவரைச் சந்திக்க ஒரு இளைஞன் தனது ஒட்டகத்தில் புறப்பட்டான். கடுமையான பயணம் செய்து, அவர் இருக்கும் இடத்தை அடைந்தான். ஓட்டகத்தில் இருந்து இறங்கிய அவன், அதைக் கட்டிப் போடாமல் ஞானியைச் சந்திக்கச் சென்றான். ஞானியிடம் அவன், ""மறை ஞானியே! நான் இறைவனை முழுமையாக நம்புகிறேன். எல்லா உயிர்களையும் அவரே காக்கிறார். இப்போது கூட பாருங்களேன்! என் ஒட்டகத்தைக் கூட கட்டிப்போடவில்லை. அது எங்கும் போகாது. ஏனெனில், இறைவன் அதைப் பார்த்துக் கொள்வான் என நம்புகிறேன், என்று மிகப்பெருமையாகப் பறை சாற்றிக் கொண்டான்.ஞானி அவனிடம், ""ஒட்டகத்தைக் கட்டிப் போட்டால் தான் அது தனது இருப்பிடத்தில் நிற்கும். இல்லாவிட்டால், நடந்து வந்த களைப்பில், வேறு யாருடைய ஒட்டகத்திற்காவது வைக்கப்பட்டிருக்கும் உணவில் வாய் வைக்கும். இது மற்றவர்களுக்கு இடைஞ்சல் தருவது போலாகும். மேலும், அது வேறு எங்காவது போய்விடும். இறைவன் ஒட்டகத்திற்கு தந்திருக்கும் சுபாவம் அது. இதையெல்லாம் அறியும் அறிவை நமக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். அதைப் பயன்படுத்தாதது நமது தவறு. ஒன்றைப் புரிந்து கொள். நம்மால் என்னவெல்லாம் முடியுமோ, அதை நாமே செய்து கொள்ள வேண்டும். அதைக் கூட செய்யாமல், ஏதாவது இழப்பு ஏற்பட்டுவிட்டால், இறைவனைக் குறை சொல்வதில் பல னில்லை. உன் கட மையை நீ ஒழுங்காகச் செய்ய வேண்டும். இதையே இறைவன் உன்னிடம் எதிர்பார்க்கிறான், என்றார். மறைஞானி சொன்னதைக் போல, இறைவன் தந்துள்ள அறிவைப் பயன்படுத்தி கடமையை சரிவர செய்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி