உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமதி அம்பாள் உண்டியலில் லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்திய பக்தர்!

கோமதி அம்பாள் உண்டியலில் லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்திய பக்தர்!

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் போது கோமதிஅம்பாள் சன்னதி உண்டியலில் பக்தர் ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா முடிந்த பின்பு திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி ஆகியவை எண்ணுவது வழக்கம். இதற்காக இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவிற்கு முன்னதாக சங்கரநாராயணசுவாமி கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. ஆடித்தபசு திருவிழா முடிந்த நிலையில் கோயில் கலையரங்கத்தில் நேற்று இரண்டாம் நாளாக உண்டியல் எண்ணும் பணி சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் ராஜாமணி தலைமையில், நெல்லை அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை ஆணையரின் பிரதிநிதி நாராயணவடிவு, ஆய்வாளர் ரோகிணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து துணை ஆணையர் ராஜாமணியிடம் கேட்ட போது, உண்டியல் எண்ணும் பணியின் போது கோமதிஅம்பாள் சன்னதியில் உள்ள ஒரு உண்டியலில் பக்தர் ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை(ஒரு லட்சம் ரூபாய்) காணிக்கையாக செலுத்தி இருந்தார் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !