உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

கோத்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

கோத்தகிரி: கோத்தகிரி பர்ன்சைடு கல்யாண சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, முருக பெருமானுக்கு, 108 மூலிகை பொருள்களால் சிறப்பு வேள்வி வழிபாடுகள், மலர் அர்ச்சனை, பேரொளி வழிபாடு நடத்தப்பட்டன.தொடர்ந்து, 11:00 மணிக்கு, 16 வகை நல்வாசனை திரவியங்களின் மூலம், அபிஷேக பூஜையும், பகல்,12:00 மணிக்கு, தீர்த்த அபிஷேகம், அலங்கார பூஜையும் நடந்தது. பின்பு, முருக பெருமான் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிப்பாடுகள் நடந்தன.பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு உற்சவர் திருக்கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 3:30 மணிக்கு சிறப்பு பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். இதே போல, கோத்தகிரி சக்திமலை, தேன்மலை, சக்கத்தா, காத்துகுளி, நட்டக்கல், டி. மணியட்டி மற்றும் தொதநாடு கம்பட்டி உள்ளிட்ட முருகன் கோவில்களில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !