பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து வந்த திருப்பரங்குன்றத்து தேர்!
ADDED :3526 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நான்கரை மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையை சுற்றி தேர் வலம் வந்தது. இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இத்திருவிழா மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 14ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 5.30 மணிக்கு உற்சவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பரிவட்டம் கட்டப்பட்டு, பெரிய வைரத்தேரில் எழுந்தருளினர். காலை 6.35 மணிக்கு புறப்பட்ட தேர், நான்கரை மணிநேரம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்து, காலை 11.10 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது.இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.