புதுச்சேரியில் ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம்
புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில், ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து, புதுச்சேரியில் 4வது ஆண்டாக நேற்று மாலை, லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினர். இதற்காக, திருப்பதியிலிருந்து சுவாமி புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தங்க வைக்கப்பட்டார். அங்கு, திருப்பதியில் நடப்பது போன்று நேற்று காலை முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகியவை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சீனுவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று மாலை சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு, அங்கு, ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து லாஸ்பேட்டைக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. இதனால், புதுச்சேரி மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.