உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்.22ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்: ஏப்.20ல் மதுரை நோக்கி பயணம்

ஏப்.22ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்: ஏப்.20ல் மதுரை நோக்கி பயணம்

அழகர்கோவில்: வரலாற்று சிறப்புமிக்க அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,18ல் துவங்குகிறது. ஏப்., 20ல் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு புறப்படும் சுந்தரராஜ பெருமாள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏப்., 22ல் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.,18ல் துவங்குகிறது. பல்லக்கில் புறப்படும் சுந்தரராஜ பெருமாள் முதல் 2 நாட்களும் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். ஏப்., 20ல் மாலை 5.00 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார்.

கோயில் ராஜகோபுரத்தில் உள்ள 18ம் கருப்பணசாமி சன்னதி முன் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு கொம்பு சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7.00 மணிக்கு கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். வழியில் மண்டக படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் ஏப்., 21ல் காலை 6.00 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது.

ஆற்றில் இறங்குகிறார்:ஏப்., 22ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு தல்லாகுளத்தில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். பின் அங்கிருந்து புறப்படும் அவர், காலை 6.00 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 7.30 மணிக்கு வைகையில் இருந்து புறப்பட்டு, காலை 10.00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு செல்கிறார். ஏப்., 23ல் காலை சேஷ வாகனத்தில் புறப்படும் அவர், பகல் 12.00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.

பூப்பல்லக்கு:இரவு 8.00 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 24ல் காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையில் அருள்பாலிக்கிறார். இரவு 2.00 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அங்கிருந்து மலைக்கு புறப்படும் அவர், ஏப்., 26ல் அழகர் மலையை அடைகிறார்.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லதுரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !