எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா!
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில், நேற்று, ஜாத்திரை திருவிழா நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரில் உள்ள எல்லையம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி, கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, விநாயகருக்கு பொங்கல் வைத்தல், பெருமாள் உற்சவம் மற்றும் எட்டியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜாத்திரை உற்சவம், நேற்று, காலை 8:00 மணிக்கு, பம்பை உடுக்கையுடன் அடிதண்டமும், காலை 11:00 மணிக்கு பக்கோர்குத்துதல், முள் குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின், மாலை 3:00 மணிக்கு, மஞ்சள் நீராடலும், இரவு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலாவும் நடந்தது. வரும் ஏப்., 3ம் தேதி, விடையாற்றியுடன் ஜாத்திரை நிறைவு பெறும்.