விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பொங்கல் திருவிழா ஏப்.3ல் நடக்கிறது. நேற்று இரவு 8.01 மணிக்கு அம்மாளின் வாகனமான சிங்கம் உருவம் பொறித்த கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வள்ளி திருமணம் நாடகமும், இரவு 10 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.3ல் நடக்கிறது. அன்று இரவு 8.01 மணிக்கு மாரியம்மன் கோயிலில் அடுப்பு பூஜையும், தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதலும் நடக்கிறது. ஏப்.4ல் பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.5ல் மாலை 5மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை 7 மணிக்கு தேர் நிலை வந்து சேருதலும், மறுநாள் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.