உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணங்களை நான்கு நிலைகளில் அணுக வேண்டும்!

புராணங்களை நான்கு நிலைகளில் அணுக வேண்டும்!

தி.நகர் : புராணங்களை, நான்கு நிலைகளில் அணுக வேண்டும், என, காஞ்சிபரம், ஏனாத்துார் பல்கலையின் வடமொழித்துறை பேராசிரியர், ஜி.சங்கர நாராயணன் பேசினார். தருமையாதீன மடாலய தேவாலய சமய பிரசார நிலையத்தின், வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திர கருத்தரங்கின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.

18 வகையாக பிரிப்பு: அதில், பதினெண் புராணங்கள் என்ற தலைப்பில், காஞ்சிபுரம், ஏனாத்துார் பல்கலையின் வடமொழித்துறை பேராசிரியர், ஜி.சங்கர நாராயணன் பேசியதாவது: புராணங்கள், வேத அறிவை புகட்டுவதற்காக, வேதவியாசரால் தொகுக்கப்பட்டவை. இந்த உலகின் தோற்றத்தையும், அதற்கான காரணங்களையும், மனித உயிரின் நோக்கத்தையும் கூற ஒரே ஒரு புராணம் போதும் என்றாலும், கருத்துக்களை எளிமைப்படுத்துவதற்காக, 18 வகையாக பிரிக்கப்பட்டு, பதினெண் புராணங்களாக தொகுக்கப்பட்டன. அவை, மகா புராணங்கள் எனவும் அழைக்கப்படும். தர்மத்தில் உலகின் முன்னோடியாக பாரதம் விளங்கியது. தர்ம சிந்தனையை நிலைநிறுத்தவே, வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் உள்ளிட்ட படைப்புகள் உருவாக்கப்பட்டன. தர்ம சிந்தனைகளை பரப்ப வேண்டும் என்பதற்காக, அரசனைப் போல் கட்டளையிடும் தொனியில் வேதங்களும், ஒரு நாயகனை முன்னிறுத்தி, மக்களிடம் கதை சொல்வது போல இதிகாசங்களும், பல நாயகர்களை கொண்டு, நண்பனிடம் கதை சொல்வது போல புராணங்களும், மனைவியிடம் விருப்பத்துடன் பேசுவது போல காப்பியங்களும் படைக்கப்பட்டன. பதினெண் புராணங்களை,எண்ணிக்கையின் அடிப்படை யில் ஆறு ஆறாக பிரித்தால், மூன்று பிரிவுகள் கிடைக்கும். அவற்றை, ராஜஸ புராணம், சத்வ புராணம், தாமச புராணம் என, வகைப்படுத்தலாம். ராஜஸ புராணங்கள், பிரம்மனை பற்றியும், சத்வ புராணங்கள் திருமாலை பற்றியும், தாமச புராணங்கள் சிவனை பற்றியும் கூறுகின்றன.

ஆதி புராணம் என அழைக்கப்படும் பிரம்ம புராணமே முதலில் தோன்றியது. பிரம்மனின் பத்ம கல்பத்தில் எழுதப்பட்ட பத்ம புராணம் இரண்டாவதாகும். மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு, பராசர மகரிஷி பதில் அளிப்பது போல அமைந்த, மூன்றாவது புராணம், விஷ்ணு புராணம். உலகின் தோற்றம், அவதாரங்கள், படைப்புகள் உள்ளிட்டவற்றை இது கூறும்.

ஒரே கண்ணோட்டம் கூடாது: முழுமுதற் கடவுளான சிவனின் பெருமைகளை கூறும் தாமச புராணமான, சிவபுராணம் நான்காவதாகும். இது, வியாசரின் சீடரான சூதமா முனிவர் இயற்றியது. இதில், லிங்கத்தின் தோற்றம், திருமால், பிரம்மாவிற்கு வரம் தந்தது, பூஜையின் விதிகள், மந்திரங்கள் உள்ளிட்டவை விளக்கப்பெறும்.இவ்வாறாக, சூரிய, சந்திர குலங்களை பற்றியும், அவர்களின் வாழ்வியலையும் புராணங்கள் படம்பிடிக்கின்றன. பதினெண் புராணங்கள் ஒவ்வொரு நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருப்பதை, அவற்றை படித்தால் உணர முடியும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஆண்டில் ஒரு முறையேனும், குளத்தில் இருந்து ஒரு பிடி மண்ணாவது எடுக்க வேண்டும் என்ற கருத்தும், விரதங்களின் விதிமுறைகள் குறித்தும் புராணங்களே விளக்குகின்றன.

பின்னால் நடந்த, முகலாய, ஆங்கிலேய படையெடுப்புகள் குறித்தும் முன்கூட்டியே, பவிஷ்ய புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. புராணங்களை படிக்கும் தற்காலத்தோர், அவற்றை ஆபாசங்கள் நிறைந்ததாகவும், உண்மைக்கு ஒவ்வாததாகவும் கூறுகின்றனர். ஆனால், புராணங்களை ஒரே கண்ணோட்டத்தில் காணக்கூடாது. அவற்றை, புராண காலம், சூழல், உட்பொருள், அவை போதிக்கும் தத்துவம் ஆகிய நான்கு நிலைகளில் நின்று, ஆராய்ந்து அறிய வேண்டும். சில உட்பொருளுக்காகவும், சில தத்துவங்களுக்காகவும் புராணங்களில் விளக்கப்படும் கதைகள் அமையும். கவுதம முனிவரின் கதையையும், அகலிகை, இந்திரன் சாபம் பெற்றதற்கான மூலங்களையும் அறிய, முன்கதை, மூலம் ஆகியவற்றை அறிந்தால் தான், அதன் தத்துவம் புரியும். அவ்வாறு, பல்வேறு தளங்களில் இருந்தே, புராணங்களை புரிந்து கொள்ள முயல வேண்டும். அப்போது தான், புராணங்களின் அடிப்படை அறிவை பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூன்றுதான் உள்ளன: நிகழ்ச்சியில், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வர் ம.வே.பசுபதி பேசுகையில், ஐம்பெரும் காப்பியங்களில், மூன்றுதான் தற்போது உள்ளன. அதோடு, சேக்கிழாரின் பெரிய புராணத்தையும், கம்பரின் ராமாயணத்தையும் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால், சமணம், பவுத்தம், சைவம், வைணவ சமயங்களின் முழு தொகுப்பாக அது அமையும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !