உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் ஆமை வேகத்தில் சித்திரை திருவிழா பணிகள்!

மதுரையில் ஆமை வேகத்தில் சித்திரை திருவிழா பணிகள்!

மதுரை: மதுரையில் ஆமை வேகத்தில் சித்திரை திருவிழா பணிகள் நடப்பதாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மீது இந்து ஆலயப்பாதுகாப்பு குழு மற்றும் திருக்கோயில் பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டியுள்ளது. மதுரையில் இதன் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சுதாகர் பங்கேற்றார்.

தீர்மானங்கள்: சித்திரை திருவிழா துவங்க சில நாட்களே உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேரோடும் மாசி வீதிகளில் தற்போது தார்சாலை பணிகள் 9 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. அதை தரமாகவும், உறுதித்தன்மையுடன் அமைக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். மீனாட்சி அம்மன், சுவாமி திருவீதி உலா நேரங்கள் மற்றும் சித்திரை திருவிழா காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.பக்தர்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் அமைக்கவும், அன்னதானம் செய்வதையும் மாநகராட்சி, போலீசார் ஊக்கப்படுத்த வேண்டும். இதில் தேவையில்லாத விதிகளை காரணம் காட்டி இடையூறு செய்யக்கூடாது. கூடலழகர் கோயிலில் விஷ்ணு நாம பாராயணம் பாட கோயில் நிர்வாகம் தடை நீக்கியது வரவேற்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !