திருமலையில் ஆண்டு பிரம்மோற்சவம் ஆர்ஜித சேவைகள் 9 நாட்கள் ரத்து
நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் செப்டம்பர் 29 முதல் சிறப்பு வைபவமாக நடத்தப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி, எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். திருமலை கோவிலில், செப்டம்பர் 29 (புரட்டாசி 12) முதல் அக்டோபர் 7 வரை, 9 தினங்கள் நடைபெற உள்ள, பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து, நிர்வாக அதிகாரி, இணை நிர்வாக அதிகாரி சீனிவாசன், நேற்று முன்தினம் (சனியன்று) திருமலையில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: திருமலை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கோவிலில் சுவாமிக்கு நடத்தப்படும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி., தரிசனம், 9 தினங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. விருந்தினர் மாளிகை, தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, திருப்பதி - திருமலை இடையே, 386 ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படும். திருமலை மலைப்பாதையில் வாகன நெரிசல், விபத்துக்களை தவிர்ப்பதற்காகவும், கருடசேவை தினத்தன்று இருசக்கர வாகனங்கள், லாரி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு, திருப்பதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து, அலிபிரி டோல்கேட் வரை, பக்தர்களுக்கென தனி வழி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அலிபிரி டோல்கேட், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழிகளில், பக்தர்களின் உடமைகளை திருமலைக்கு அனுப்பி வைக்க, சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, திருமலையில் கூடுதலாக, மேலும் ஒரு (மடம் போன்ற) விசாலமான வளாகம் ஏற்படுத்தப்படும்.
முன்பதிவு ரத்து: பிரம்மோற்சவத்தையொட்டி, சென்னை உட்பட, நாட்டின் பல நகரங்களில் உள்ள தேவஸ்தான முன்பதிவு மையங்களில், 50 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும், தங்கும் விடுதி ஆகியவற்றுக்கான முன்பதிவு செய்யப்படவில்லை. செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரை, திருமலைக்கு வரும் பக்தர்கள், மூலவர் தரிசனத்தை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை(அக்.2)க்காக, தரிசன டிக்கெட் பெறுவதற்காக, முன்பதிவு மையங்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.