விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா: நேர்த்திக்கடன் பொம்மைகள் ரெடி!
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு அலங்காரத்தில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலையொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அதிளவில் பொம்மைகள் விற்பனைக்காக வந்துள்ளன.
பொம்மைகள் ரெடி: விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, செங்குன்றாபுரம், இருக்கன்குடி பகுதி மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் தெய்வங்களுக்கு பங்குனி பொங்கலையொட்டி பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தீர்க்க நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வர். உடல்நிலை சரியாக இதில் விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்டங்களில் பிரசித்திப்பெற்றது. ஆண்களுக்கு உடல்நிலை சரியாக ஆண் பொம்மை, பெண்களுக்கு உடல்நிலை சரியாக பெண் பொம்மை, குழந்தைகளுக்கு உடல்நிலை சரியாக குழந்தை பொம்மை, குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு தொட்டில் குழந்தை பொம்மை என பலவித நேர்த்திக்கடன் வேண்டி விழாவின்போது அம்மனுக்கு வழங்குவர்.
மூன்று மாதம் விரதம்: இதற்கான பொம்மைகள் செய்யும் நாகராஜன், “எல்லா ஊர்களிலும் இருந்து நேர்த்திக்கடன் பொம்மை கேட்டு ஆர்டர் வரும். அதிலும் விருதுநகரில் மக்கள் அதிகமாக நேர்த்திக்கடன் பொம்மைகள் தயாரிக்கப்படும். நேர்த்திக்கடன் பொம்மைகள் என்பதால் தை, மாசி, பங்குனி என மூன்று மாதங்கள் விரதம் இருந்து பொம்மைகள் செய்வோம். களிமண், வண்டல் மண், மணல் மூன்றையும் கலவையாக சேர்த்து அச்சில் வைத்து பொம்மைகள் செய்வோம்.
ரூ.50 முதல் ரூ.100 வரை: ஒரு சில பொம்மைகளுக்கு கைவேலை உண்டு. விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனுக்கு வேண்டிக் கொள்பவர்கள் அதிகம் என்பதால் பங்குனி, சித்திரை மாதங்களில் பொம்மை விற்பனை அமோமாக இருக்கும். ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. நேர்த்திக்கடன் என்பதால் லாபம் பார்க்காமல் குறைந்த விலையிலே விற்கிறோம்,”என்றார்.