சிதம்பரம் தில்லைக்காளியம்மனுக்கு அமாவாசை அர்த்தஜாம சிறப்பு பூஜை !
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளி அம்மனுக்கு பங்குனி மாத அமாவாசையையொட்டி அர்த்த ஜாம சிறப்பு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந் தது. பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் பங்குனி மாத அமாவாசையையொட்டி 179வது சிறப்பு அர்த்தஜாமம் பூஜை, மகா அபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதனையொட்டி விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிப்பாடு நடந்தது. தொடர்ந்து தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூ ஆகியவைகளால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு அமாவாசை தின சிறப்பு அர்த்தஜாம பூஜை, தீபாராதனை நடந்தது. பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.