உப்பியலிப்பன் கோவில் வைர நகைகள் மாயம்!
தஞ்சை மாவட்டம், உப்பிலியப்பன் கோவில் சுவாமி நகைகள் காணாமல் போன வழக்கில், வடபழனி முருகன் கோவில் இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் இளம்பரிதி, அரியலுார் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். சமயபுரம் கோவிலில், 2010ம் ஆண்டு சுவாமி நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கோவில்களில் இந்து சமய அறநிலைய துறை ஆய்வு மேற்கொண்டது. அதில், தஞ்சை மாவட்டம், உப்பி லியப்பன் கோவிலும் ஒன்று. ஆய்வில், உப்பிலியப்பன் கோவிலில் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மற்றும் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால், அவை மாயமானதற்கு ஆதாரம் எதுவும் சிக்காததால், அரியலுார் சி.பி.சி.ஐ.டி போலீசில், கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என, 13 பேர் மீது, அறநிலைய துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணையில், அப்போதைய கோவில் உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலராக இருந்த இளம்பரிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவில் அறங்காவலர்களும், ஊழியர்களும் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். உதவி ஆணையர் விஜயகுமார் நீ திமன்றத்தில் ஆஜராகி, ஜாமின் பெற்றார். ஆனால், இளம்பரிதி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும், ஜாமின் வாங்காமலும் பணியில் தொடர்ந் தார். இதற்கிடையே, வடபழனி முருகன் கோவில், துணை ஆணையராக, 2011ம் ஆண்டு இளம்பரிதி பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின், உப்பிலியப்பன் கோவில் சுவாமி நகைகள் காணாமல் போன வழக்கில், இளம்பரிதியை, நேற்று முன்தினம் அரியலுார் சி. பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். – நமது நிருபர் –