உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராரு... வாராரு... அழகர் வாராரு...மாயமாகும் மைய மண்டபங்கள் மறக்கப்பட்ட விழா மரபுகள்

வாராரு... வாராரு... அழகர் வாராரு...மாயமாகும் மைய மண்டபங்கள் மறக்கப்பட்ட விழா மரபுகள்

மதுரை: வாராரு வாராரு அழகர் வாராரு, சப்பரம் ஏறி வாராரு நம்ம சங்கடம் தீர்க்க போறாரு... முந்துது முந்துது சாதி சனம், அட அழகர் கண்ணுல சிக்கலையே... என, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் காண வைகையில் இறங்கி வரும் அழகான அழகரை பார்க்க ஆர்ப்பரிக்கும் அலை கடலைப் போல ஆரவாரமாய் அலைமோதும் மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவேயில்லை.

நம் சிந்தனையில் சிற்பிகள் செதுக்கிய சிலையாய் நிலைத்து நிற்கும் ஒரு விழா இந்த சித்திரை திருவிழா. மதுரையில் நகர் வலம் வரப்போகும் அழகர், திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் இறங்கிய மண்டபங்கள், இவ்விழாவின் மரபுகள் குறித்து செந்தமிழ் கல்லுாரி உதவி பேராசிரியர், வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆறுமுகம் கூறியதாவது:அழகர் இறங்கிய பழைய மண்டபங்கள் குறித்து நான் எழுதிய தேனுாரும் அழகர் விழா கட்டமைப்பும் என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளேன். வைகை ஆற்றுக்குள் இருந்த இந்த மண்டபங்கள் காலப்போக்கில் சிதைந்த போயின. சில குறிப்புகளின் உதவியுடன் அழிந்து போன மண்டபங்களை எல்லாம் கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறேன்.

அழகர், சொக்கர் சந்திப்பு: சிம்மக்கல், யானைக்கல் அருகேயுள்ள வைகை ஆற்றுக்குள் மண்டபத்தை பாண்டிய மன்னரின் படைத் தளபதி காலிங்கராயன் கட்டியதால், இதை காலிங்கராயன் மண்டபம் என அழைக்கிறோம். மீனாட்சி கோயிலை சார்ந்த இங்கு மாசி மண்டல உற்சவ விழாவின் போது தீர்த்தவாரி நடந்தது. இம்மண்டபத்தில் அழகரும், சொக்கரும் சந்தித்துள்ளனர் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் உள்ளன. தற்போது தேனுார் மண்டபத்தில் அழகர் எழுந்தருளுவது அனைவருக்கும் தெரிந்ததே.

அழகர் விழா வரலாறு:
காலிங்கராயன், தேனுார் மண்டபங்கள் மட்டும் தான் நமக்கு தெரியும். இது தவிர, தேனுார் சிவன், பெருமாள் கோயில்களுக்கு எதிர்புறம் மற்றும் கோச்சடையிலும் மண்டபங்கள் இருந்தன. திருவேடகம் சந்திப்பு வைகை ஆற்றில் உள்ள ஒரு பாறையில் அழகர் இறங்கிய மண்டபம் இருந்த சான்றுகள் கிடைத்துள்ளன. இங்குள்ள வைகை ஆறு வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி பாய்வதால் காசிக்கு இணையானது என்பர். திருவேடகம் சிவன் கோயில் எதிரில் ஒரு மண்டபம் இருந்த அடையாளங்களும் உள்ளன.

குருவித்துறை கோயிலுக்கு 200 மீட்டர் கிழக்கே அழகர் மண்டபம் இருந்ததற்கான சுவடுகளை அங்கே காணமுடியும். அலங்காநல்லுார் பெரியாறு கால்வாய் கரையில் உள்ள உறங்காப்புலி மண்டபம் (தற்போது சக்தி முக்தி கணபதி மண்டபம் என்று அழைக்கின்றன. இதே போல் கோவிலுார் ஓட்டை மண்டபம், மரங்குழி ஆற்று பெருமாள், நத்தம் மூங்கில்பட்டி ஆதி அழகர் கோயில் என பல மண்டபங்களில் அழகர் இறங்கியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மண்டபங்களில் ஒன்றிரண்டு இன்றும் உள்ளது. ஆனால், அங்கெல்லாம் அழகர் இறங்கும் வரலாற்று நிகழ்வு நடப்பதில்லை.

மறந்து போன மரபுகள்:
அழகர், வைகை ஆற்றில் இறங்க வரும் வழியில் உள்ள மண்டகப்படிகளில் தங்குவார். அப்போது, பக்தர்கள் தாங்கள் வழிபடும் குல தெய்வங்களை பெட்டிகளில் கொண்டு வந்து, அழகர் தங்கியிருக்கும் மண்டபம் அருகே வைத்து வழிபடும் வழக்கமிருந்தது. ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, முக்தி அடைந்தவர்களின் மணிமண்டபங்களை அழகர் வரும் வழிகளில் கட்டி வைப்பதோடு, தண்ணீர் மற்றும் மோர் பந்தலும் நடந்திருக்கிறது. தேனுாரில் சில இடங்களிலிருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்த பின்பு தான் சுவாமி அழகர், கோயிலை விட்டு கிளம்புவார். இதுபோன்ற பாரம்பரிய மரபுகளை நாம் கொஞ்சம், கொஞ்சமாக மறந்துவிட்டோம்.

மாயமாகும் மண்டபங்கள்:
ரா.சிவக்குமார், எழுத்தாளர்: மதுரை யானைக்கல், தேனுார் உள்ள மண்டபங்கள் கலாசார பெருமை பெற்றது. முன்பு, அழகர் இறங்கும் விழா தேனுாரில் தான் நடந்தது. பின், நாயக்கர் காலத்தில் மதுரைக்கு மாற்றப்பட்டது. தேனுார் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வண்டியூரில் ஒரு மண்டபத்தை கட்டி கொடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடத்திட ஏற்பாடு செய்தார் திருமலை நாயக்கர்.

இன்று, தேனுார் மண்டபம் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு, கீழே விழும் நிலையில் உள்ளது. வைகையில் பெரிய வெள்ளம் வந்தால் மண்டபம் முற்றிலுமாக அழிந்து போகும். அதே போல், யானைக்கல் மண்டபத்திற்கு அருகில் உள்ள கோயில்களின் உற்சவ மூர்த்திகளை மாதம் ஒரு முறை கொண்டு வந்து பூஜைகள் செய்வர். அப்போது மக்கள் பலர் மண்டபத்திற்கு வந்த உற்சவ மூர்த்திகளை வழிபட்டு செல்வர்.

இன்று, இம்மண்டபம் இடியும் நிலையில் உள்ளது. துாண்கள் அனைத்தும் சேதமடைந்து விழுந்து வருகிறது. இம்மண்டபத்தை சீரமைத்து, மீண்டும் உற்சவ மூர்த்திகள் வழிபாட்டை கொண்டு வரவேண்டும். அப்படி செய்தால் இப்பகுதி வைகையை மக்கள் அசுத்தம் செய்யாமல் சுத்தமாக வைத்திருப்பர். இது போல மாயமாகும் பாரம்பரிய பெருமையுள்ள மைய மண்டபங்களை சீரமைத்து, தொடர்ந்து பராமரித்தால் சித்திரை திருவிழா மேலும் மெருகேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !