உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா; 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா; 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, பங்குனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 4:45 மணிக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கிருத்திகை விழா என்பதாலும், வழக்கமான கிருத்திகையை விட, ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மலைக்கோவிலில் குவிந்தனர். பொது வழி, சிறப்பு நுழைவு கட்டணமாக, 25, 50 மற்றும் 100 ரூபாய் வரிசையிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பொது வழியில், 4 மணி நேரமும், சிறப்பு நுழைவு கட்டணத்தில், குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமும் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


சுவர் ஏறி குதித்த பக்தர்கள்: நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், சில பக்தர்கள், வி.ஐ.பி., தரிசன நுழைவாயில் அருகில், தடுப்பு சுவர்களில் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பெண் பக்தர்கள், சிறு குழந்தைகள் உட்பட பலர் ஆபத்தான முறையில் சுவர் ஏறிச் சென்று மூலவரை தரிசித்தனர்; இதை, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !