உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

திருவெண்காடு கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: திருவெண்காடு, சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், காசிக்கு இணையான, ஆறு கோவில்களில் முதன்மையானதாகும். இங்கு, நவ கிரகங்களில் ஒன்றான புதனுக்கு தனி சன்னிதி உள்ளது.

இக்கோவில் ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சந்திரன், அக்னி, சூரியன் ஆகிய முக்குளங்களில் நீராடி, சுவாமியை வழிபட்டால் சகல நலனும் பெறலாம் என்பது ஐதீகம். இந்த கோவிலில் கும்பாபிஷேகம், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள யாக சாலையில் சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பாள், அகோரமூர்த்தி, நடராஜர், புதன் உள்ளிட்ட சுவாமிகள் மற்றும் பரிவாரங்களுக்கு, 125 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, முதல் கால யாக பூஜை, கடந்த, 8ம் தேதி துவங்கியது. யாகத்தில், 108 வகையான பொருட்கள், பழங்கள் இடப்பட்டன. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாக பூஜை; மாலை, மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை; மாலை, ஐந்தாம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை ஆறாம் கால யாக பூஜை நடந்து, மகா புர்ணாஹூதி முடிந்தவுடன், பூஜிக்கப்பட்ட தீர்த்த குடங்கள், கலசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !